ஞாயிறு, 27 மார்ச், 2011

உயிர் மொழி: மாமியார்த்தனம்….

உயிர் மொழி: மாமியார்த்தனம்….
தாயா தாரமா என்கிற இந்த குழப்பத்தில் நிறைய ஆண்கள் சிக்கிக்கொள்கிறார்கள். இந்த பிரச்சனைக்கு பஞ்சாயத்து செய்யவே பல ஆண்களின் பாதி பிராணன் போய்விடுகிறது. இன்றைக்கு இந்திய திருமணத்தில் ஏற்படும் மிக மோசமான விரிசல்களுக்கு காரணமே இந்த சமண்பாட்டு கோளாறு தான்.


உதாரணத்திற்கு இவரை எடுத்துக்கொள்வோமே, பெயரெல்லாம் சொல்லமுடியாது, தொழில் தர்மம் தடுக்கிறது, கதைக்காக வேண்டுமானால் இவரை பெயரை ரகு என்று வைத்துக்கொள்வோம். இவருக்கு திருமணமாகி பல ஆண்டுகளுக்கு இவர் அம்மாவின் பேச்சை கேட்டுக்கொண்டு தினமும் மனைவியை டார்சரோ டார்சர்…சும்மா அவளையும் அவள் குடும்பத்தையும் குறைசொல்லிக்கொண்டிருப்பது, கிடைத்த சாக்கிற்கெல்லாம் அவளை மட்டம் தட்டி அவமானப்படுத்துவது, உங்க வீட்டில் செய்தது/கொடுத்தது/பேசியது இத்யாதி இத்யாதி சரி இல்லை என்று எல்லாவற்றையும் நொட்டை சொல்லிக்கொண்டிருப்பது. இப்படியே இருந்தால் பாவம் மனைவி தான் என்ன செய்வாள். வேலைக்காவது போய் சற்று நேரம் குடும்ப பிரச்சனைகளை மறந்து நிம்மதியாக இருக்கலாம் என்றால் அதற்கும், “படிச்ச திமிர், வேலைக்கு போகிற திமிரு” என்றெல்லாம் சொல்லி, சமையல், குழந்தை பராமறிப்பு மாதிரியான விஷயங்களில் ஆப்படிக்க ஆரம்பித்தார் மாமியார். இதை தட்டிக்கேட்க துப்பில்லாமல், ”பெரியவங்கன்னா அப்படித்தான் பேசுவாங்க, அட்ஜெஸ்ட் பண்ணிக்கிட்டு போக தெரியலன்னா நீயெல்லாம் என்ன பொம்பளை,” என்று அதற்கும் மனைவி மேலேயே பழியை போட்டுவிட்டு எஸ்க்கேப் ஆனார் ஹீரோ.

பொருத்து கொள்ள முடியாமல் தனி குடித்தனம் போயிடலாமே என்று மனைவி மன்றாடி கேட்டுக்கொண்டால், “எங்கம்மா கிட்டேர்ந்து என்னை பிரிக்க பார்க்கிறியா?” என்று சண்டைக்கு வந்துவிட்டார் ரகு. சரி இதெல்லாம் இப்படி நடந்துக்கொண்டிருக்கும் போது மாமியார் என்ன செய்தார்? மாமனார் என்ன செய்தார் என்று தானே யோசிக்கிறீர்கள்? மகன் தன்னை விட்டு போய்விடுவான் என்கிற ஆதங்கத்தில் மாமியார் எல்லோருக்கும் ”நான் செத்துபோறேன்” என்று அறிவித்துவிட்டு, தடபுடலாக அதிகமாத்திரைகள் சாப்பிட்டு விட, மாமனார் அவசரமாக அவரை ஹாஸ்பிட்டலில் சேர்த்து ரகசியமாய் என்னை வந்து பார்த்து, சொன்னதாவது: ”என் மருமகள் பாவம் படாத பாடு படுகிறாள். ஒரு பெண்னை இன்னொரு பெண்ணே இப்படி துன்புறுத்துவதை என்னால் சகிக்கவே முடியவில்லை. என் மனைவியை எந்த காலத்திலும் என்னால் அடக்க முடிந்ததே கிடையாது, அழுகை, நச்சு, உண்ணாவிரதம், ”இந்த குடும்பத்திற்காக நான் எவ்வளவோ செய்தேனே, என்னை இப்படி படுத்துறீங்களே” என்கிற ஒப்பாறி, ”வீட்டை விட்டு போறேன்”, ”எல்லோருக்கும் சொல்லி நியாயம் கேட்குறேன்”, எதுவுமே பலிக்காவிட்டால் ”செத்து போறேன்” என்று பன்முனை தாக்குதலாக இமோஷனல் பிளாக்மெயில் செய்ய, நான் சூழ்நிலை கைதியாக ஏதும் செய்ய முடியாமல் மாட்டிக்கொள்கிறேன். இந்த லட்சணத்தில் இந்த தற்கொலை டிராமா வேறு. அவள் போட்டுக்கொண்டது வெறும் பத்து ஆண்டாசிட் மாத்திரை தான், அதில் எல்லாம் சாக மாட்டாள் என்று எனக்கும் தெரியும், அவளுக்கும் தெரியும். ஆனாலும் நான் அவளை இங்கே அட்மிட் செய்தது, கொஞ்ச நாளாவது நாங்கள் நிம்மிதியாக இருக்கலாம், அதுவும் இல்லாமல் நீங்கள் எப்படியாவது என் மனைவியை திருத்திவிடுவீர்கள் என்று தான்”

மாமியார்களை திருத்துவதென்னவோ ரொம்ப சுலபம் மாதிரி அவர் சொல்லிவிட்டு போனார். முழுக்க முழுக்க மனநலம் குன்றிய மனிதர்களை கூட சீக்கிரமே சரி செய்து ஓரளவு அவர்களது செயல்பாட்டை முன்னேற்ற முடியும், ஆனால் மோசமான மாமியாருக்கு மனமாற்றம் செய்வதென்பது அதை விட கடினமான வேலையாற்றே, இருந்தாலும் முயற்ச்சிக்கிறேன் என்று பெருந்தலைவியை பார்க்க போனேன்.

பால் வடியும் முகமும், என்னை போல பாவமான பெண் உலகிலேயே இல்லை என்பது மாதிரி ஒரு பாவ்லாவுமாக படுத்திருந்தார் மாமியார் அவர்கள். தன் மகனை பெற்று வளர்க்க அவர் பட்ட பாடுகளை அடுக்கி, இப்படியெல்லாம் அரும்பாடுபட்டு வளர்த்து ஆளாக்கிய தன் மகனை ”அந்த மூதேவி தலையனை மந்திரம் ஓதி கைக்குள் போட்டுக்கொண்ட” கதையை மாம்ஸ் நீட்டி முழக்கி, “அவனுக்கு ஆயிரம் பொண்டாட்டி கிடைப்பா டாக்டர், ஆனா இன்னொரு அம்மா கிடைபாளா?” என்று பஞ்ச் டைலாக் எல்லாம் அடித்து அசத்த, நான் இப்படி எல்லாம் பாடு பட்டு உங்கள் மகனை வளர்த்து ஆளாக்கியதற்கு அர்த்தமே இல்லாமல் போய்விட்டது போங்கள் என்றதும் மாமியார் யோசிக்க ஆரம்பித்தார்.

புழு, பூச்சில் ஆரம்பித்து, சிங்கம், புலி, கரடி, மனிதன் வரை எல்லா ஜீவராசியிலுமே தாய் என்பது குட்டிகளுக்காக ரொம்பவே மெனக்கெடத்தான் செய்கிறது. எந்த குட்டியும் என்னை பெற்றுக்கொள், எனக்காக சிரம்படு என்று தாயிடம் வேண்டிக்கொண்டு பிறப்பதில்லை. தாய் தான் வேண்டுமென்றே குட்டிகளை பெறுகிறது. இப்படி எல்லாம் தன் உடலை வருத்தி தாய் ஏன் குட்டிகள் போடவேண்டும்? காரணம் இது மட்டும் தான் அவள் மரபணுக்களை பரப்பிக்கொள்ள இருக்கும் ஒரே வழி. ஆக, தன் மரபணுக்கள் பரவவேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக, முழுக்க முழுக்க சுயநலமாக தாய் செய்யும் காரியம் தான் இனவிருத்தி.

இந்த இனவிருத்தியை மனித தாய் மட்டும் செய்யவில்லை. உலகில் உள்ள எல்லா ஜீவராசிகளும் செய்யும் அநிச்சை செயல் இது. மனிஷிக்காவது பிரசவிக்க, டாக்டர், பயிற்றுவிக்க வாத்தியார், கட்டுபடுத்த சட்டம், என்று எத்தனையோ ஊன்று கோல்கள் உள்ளன. ஆனால் பிறஜீவராசி தாய்மார்கள் இந்த எல்லா வேலையையும் தானே செய்கின்றன. ஆக தாய்மை சுமை என்று பார்த்தால் மனித தாயை விட, பிறஜீவராசி தாய்களுக்கு தான் அதிக பளு. இத்தனை செய்தும் இந்த பிற ஜீவராசிகள் தாய்கள் தன் கஷ்டத்தை சொல்லிக்காட்டி அதற்கு பிரதிஉபகாரம் எதிர்ப்பார்ப்பதில்லை. பிற ஜீவராசி குட்டீசும், இதை ஓவர் செண்டிமெண்டலாக எல்லாம் அனுகுவதில்லை, பிறந்தோமா, வளர்ந்தோமா, இனபெருக்கம் செய்தோமா, அடுத்த தலைமுறை எனும் தொடர் சிங்கிலியை உருவாக்கினோமா என்று மிக கேஷுவலாக வாழ்கின்றன. காரணம் இயற்க்கையை பொருத்த வரை, குட்டி வெற்றிகரமாய் இனபெருக்கம் செய்து தன் முந்தைய தலைமுறையிடமிருந்து பெற்ற மரபணுக்களை, சேதாரமின்றி, அடுத்தடுத்த தலைமுறைக்கு ஒரு அறுபடாத சங்கிலி தொடராய் பரப்புவதே குட்டி தாய்க்கு ஆற்றும் உதவியும் நன்றியும் ஆகும். இதை மீறி குழந்தை தாய்க்கு வேறு எதுவும் செய்ய வேண்டிய கடமை இருப்பதில்லை. சமூக கூட்டமாய் வாழும் யானை, டால்ஃபின், குரங்கு மாதிரியான ஜீவராசிகளில் முதுமையில் குட்டிகள் பெருசுகளை பராமறிக்கும், ஆனால் அதில் பாசம் இருக்குமே தவிற, கண்மூடித்தனமான அம்மா செண்டிமெண்ட் இருக்காது.

மற்ற ஜீவராசியில் எந்த தாயும், “நான் உன்னை பெற்றேனே, வளர்தேனே, எனக்காக நீ என்ன செய்தாய்?” என்றெல்லாம் பேரம் பேசி தாய் பாசத்தை பண்டமாற்றமாக்கி கொச்சை படுத்துவதில்லை. ஆனால் மனித தாய் மட்டும் கொஞ்சமும் சங்கோஜப்படாமல், மிக வெளிபடையாக தன் பதவியை துஷ்பிரயோகம் செய்கிறாள். சில சமயத்தில், தன் குட்டியின் இனபெருக்கமே தடைபடும் அளவுற்கு! மற்ற ஜீவராசி எதுலுமே இல்லாத இந்த விசித்திரம் மனித தாய்களில் மட்டும், அதிலும் சிலபேருக்கு மட்டும் நிகழ்வது ஏன் என்று யோசிக்கிறீர்காளா? இதற்கு விவகாரமான சில காரணங்கள் உள்ளன, அது பற்றி எல்லாம் அடுத்த இதழில்……………..
- Dr N Shalini ,www.linguamadarasi.blogspot.com
Labels: ஆனந்த விகடன் தொடர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக