ஞாயிறு, 27 மார்ச், 2011

பெண்வழி சமுதாயமும், ஆண்குறி போட்டியும்

பெண்வழி சமுதாயமும், ஆண்குறி போட்டியும்
பெண்கள் காலத்திற்கேர்ப்ப வரையறைகளை மாற்றி கலவியல் தேர்வு செய்தார்கள், இதை அணுசரித்து கெட்டிக்கார ஆண்களும் தங்கள் தன்மையை மாற்றிக்கொண்டே வந்தார்கள். இப்படி மாறி வந்த ஆண்களின் மரபணுக்கள் பரவின, மாறாத ஆண்களின் சுடவே மறைந்து போனது. இதெல்லாம் கேட்க நன்றாகத்தான் இருக்கிறது, ஆனால் இதற்கெல்லாம் ஆதாரம்? என்கிறீர்களா? அதில் தான் ஸ்வாரஸ்யமே இருக்கிறது………..

குரங்கில் இருந்து மனிதர்கள் தோன்றிய அந்த ஆரம்ப காலத்தில், பெண்கள் வேட்டையில் தீவிரமாக ஈடுபட்டுக்கொண்டிந்தார்கள். பெண்கள் வேட்டைக்கு போனார்களா? அது ஆண்களின் வேலையல்லவா என்று ஆட்சரியப்படாதீர்கள்? எல்லா விலங்குகளிலும் ஆணை விட பெண் தான் அதிக வேட்டுவ தன்மை கொண்டிருக்கும். கொசுவை எடுத்துக்கொள்ளுங்கள், ஆண் அனோஃபிலீஸ் அப்புராணி, கடிக்காது, ஆனால் பெண் துரத்தி துரத்தி நம்மை கடித்து மலேரியாவை பரப்பும். காரணம், பெண்ணுக்கு தான் தன் குட்டிகளை கட்டிக்காக்க வேண்டிய கடமை இருக்கிறது. இதனாலேயே இயற்கை பெண்களுக்கு அதிக மோப்பத்திறன், அதிக பார்வை கூர்மை, அதிக சுவை உணர்வு, அதிக கூரான செவித்திறன், அவ்வளவு ஏன் துரித கதியின் ஸ்பரிசத்தை உணரும் தன்மை ஆகியவற்றை தகவமைத்திருக்கிறது. இந்த புலன் நுணுக்கத்தினாலேயே ஆணை விட பெண் அதிக திறம்பட வேட்டையாடவல்லதாகிறது.

மனிதர்களிலும் இந்த பொது விதி இயங்கியதால், ஆதி கால மானுட பெண்களும் வேட்டையில் சிறந்து விளங்கினார்கள். மக்கள் எல்லோருமே நாடோடிகளாய் இறை தேடி அலைந்தார்கள். இப்படி அலைந்த மானுட கூட்டங்களை பெண் தலைவிகளே வழி நடத்தி சென்றார்கள். ஆக பெண்கள் ஆண்களை எதற்குமே நம்பி வாழாத காலமது.

இப்படி ஒரு காலம் இருந்ததா? இதற்கு என்ன ஆதாரம்? என்கிறீர்களா?

ஆதாரம் ஒன்று: காங்கோ நதிக்கரையோரமாய் இன்றும் வாழ்ந்து வருகிறது பொனோபோ என்கிற வானர இனம். இந்த பொனோபோக்கள் அச்சு அசல் அப்படியே மனிதர்களை போலவே நடந்துக்கொள்பவை. இவை தமக்குள் பேசிக்கொள்கின்றன. பயிற்றுவித்தால் செய்கை மொழியில் மனிதர்களுடனும் சம்பாஷிக்கின்றன. இவற்றுக்கு சிரிப்பு, அழுகை, வேடிக்கை, விளையாட்டு எல்லாமே உண்டு. இவை எல்லாவற்றையும் விட விசேஷம்: இவை கலவி கொள்ளும் விதம் அப்படியே மனிதர்களை போலவே இருக்கிறது.

மனிதர்களை போலவே என்றால் என்ன அர்த்தமாம்? மிருக கலவிக்கு மனித கலவிக்கும் பல முக்கியமான வித்தியாசங்கள் உண்டு. எல்லா மிருகங்களும் முகமே பாராமல், முன்னுக்கு பின் தான் கூடி புணரும். அதுவும் இனபெருக்க காலத்தில் மட்டும். எந்த வித சுகமுமே உணராமல், வெறுமனே குட்டி போட மட்டும் நடக்கும் ஒரு உப்பு சப்பில்லாத சம்பிரதாயமாய். ஆனால் முகம் பார்த்து, இன்னாருடன் புணருகிறோம் என்று அறிந்து, பருவகாலம் மட்டுமல்லாமல், தனக்கு பிடிக்கும் போதெல்லாம் ஆசைக்காக புணரும் தன்மை, இந்த உலகில் இரண்டே ஜீவராசிகளுக்கு தான் உண்டு. ஒன்று மானுடம், இன்னொன்று பொனோப்போ. நடத்தையிலும், மரபுகளிலும், இத்தனை ஒற்றுமை இருக்கிறதென்றால், மரபணுக்களில்? என்று பரிசோதனை செய்து பார்த்தால், ஆட்சர்யம் ஆனால் உண்மை…..பொனோப்போக்களின் மரபணு புரதங்கள் கிட்ட தட்ட 98% மனிதர்களை போலவே இருப்பதை கணக்கிட்டார்கள் விஞ்ஞானிகள். மரபணு நெருக்கத்தில் பார்த்தால் மனிதர்களும் பொனோப்போக்களும் சகோதர இனங்கள். இவற்றுக்குள் இனகலப்பு செய்தால், குழந்தைகள் பிறக்க கூட வாய்ப்பிருக்கிறதென்றால் பாருங்களேன்.

ஆனால் இதை எல்லாம் விட மிக பெரிய ஆட்சர்யம் என்ன தெரியுமா? இந்த பொனோப்போக்கள் இன்றும் தாய் வழி சமூக அமைப்பில் தான் வாழ்கின்றன. இவை மட்டும் அல்ல, நமக்கு அடுத்து நெருங்கிய சகோதர இனமான சிம்பான்ஸீகளும் தாய்வழி சமூக அமைப்பில் தான் வாழ்கின்றன. அப்படியானால் மனிதர்களும் ஆரம்ப காலத்தில் தாய் வழி சமூக முறையை கடைபிடித்திருப்பார்கள் என்று தானே அர்த்தம்.

ஆதாரம் இரண்டு: இன்றும் மனிதர்களுக்கு அம்மா செண்டிமெண்ட் தான் பலமாக இருக்கிறது. அப்பா செண்டிமெண்ட் அத்தனை பலமானதாய் இருப்பதில்லை.

ஆ 3: தொல்காப்பியம் மாதிரியான பண்டைய இலக்கண நூல்களும் மனிதர்கள் ஆரம்ப காலத்தில் தாய் வழி சமூகமாய் தான் வாழ்ந்தார்கள் என்கிறது.

ஆ 4: தொண்மையான எல்லா கலாச்சாரங்களிலும் ஆரம்பகாலத்தில் தாய் தெய்வங்களே இருந்துள்ளன…..இவற்றுக்கு நிகரான தந்தை தெய்வங்கள் இருந்ததில்லை…..உதாரணத்திற்கு தமிழர்களின் ஆரம்ப கால தெய்வமான கொற்றவை. இவள் வன தெய்வமாகவும், வேட்டுவ தெய்வமாகவும் வழங்கப்பட்டாள். சிலப்பதிகார காலம் வரை இவள் தான் பிரதான கடவுளாக இருந்திருக்கிறாள். அதன் பிறகு இவள் வனகாலியாக மாறி, வேலனுக்கு தாயாகி, அப்புறம் சிவனின் மனைவியாகி போனதெல்லாம் காலப்போக்கில் ஏற்பட்ட பரிணாமம்.

அதெல்லாம் சரி, நம்ம சங்கதிக்கு வருவோம். கொற்றவை காலத்து பெண் ஒருத்தியை உதாரணமாய் எடுத்துக்கொள்வோம். இவள் வேட்டைக்கு தானே போய்க்கொள்வாள். பெண் வழி சமூகமாய் வாழ்ந்ததால் இவள் பாதுகாப்பிற்கு எந்த பிரச்சனையும் இல்லை. இவளுக்கு சொத்துக்கள் எதுவும் கிடையாது. ஆக எதற்க்காகவும் ஓர் ஆணை அண்டிப்பிழைக்க வேண்டிய நிர்பந்தத்தில் இவள் இல்லை. இப்படி வாழும் இந்த பெண் எதற்க்காக ஒரு ஆணை நாடுவாள்?

சிம்பிள்…..அந்த ஆணினால் அவளுக்கு ஏற்படும் கலவியல் கிளர்ச்சிக்காக மட்டுமே. அந்த காலத்தில் தனி சொத்து என்கிற சமாசாரமே இல்லை, அதனால் கற்பு என்கிற நம்பிக்கையே ஏற்பட்டிருக்கவில்லை. அதனால் பெண்கள் தமக்கு பிடித்த ஆண்கள் பலரோடு கூடி மகிழ்ந்துக்கொண்டிருந்தார்கள். இப்படி ஒரு பெண் பல புருஷர்களோடு கூடிக்கொள்ளும் இந்த முறையை தான் பாலிஆண்டரி, polyandry என்போம்.

இப்படி பாலிஆண்டிரி புரியும் போது, பல ஆண்களோடு கூடி, தனக்கு அதிக சுகத்தை தருகிறவன் யார் என்பதை கண்டுகொள்ள வாய்ப்பு பெண்களுக்கு இருந்ததால், அவளை மகிழ்விக்க தெரிந்தவனையே அவள் மீண்டும் மீண்டும் நாடி கூடினாள். இதனால் பெண்களை மகிழ்விக்க தெரிந்தவனின் மரபணுக்கள் மட்டுமே பரவின. மகிழ்விக்க தெரியாதவர்கள் மரபணு ஆட்டத்திலிருந்த நீக்க பட்டன. ஆனால் ஒரு கூட்டத்தில் பல ஆண்களுக்கு பெண்ணை மகிழ்விக்க தெரிந்திருந்தால், இவர்களுக்குள் போட்டி ஏற்படுவது இயல்பு தானே. அதனால் ஒருவரை அடுத்தவர் மிஞ்சிட ஆண்கள் முயல், இதனால் காலப்போக்கில் மனித ஆண்களின் உடலில் பல மாற்றங்கள் ஏற்பட்டன.

அவற்றை பற்றி எல்லாம் அடுத்த உயிர் மொழியில்
-Dr N Shalini
Labels: ஆனந்த விகடன் தொடர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக