ஞாயிறு, 27 மார்ச், 2011

தாய்மை வெளிபாடுகள்

இயற்கையின் அமைப்பு இது தான்: மிருகங்களின் எண்ணிக்கை அதிகமாகும் போது, இதில் யார் பிழைப்பார்கள் என்பதில் கடும் போட்டி நிலவுகிறது. Struggle for survival எனும் இந்த போட்டியில் அதிகம் சாப்பிடுவதற்கோ, அதிகம் சம்பாதிக்கிறதுக்கோ, அதிக அழகு சொட்டுவதற்கோ எல்லாம் வெற்றி கிடைப்பதில்லை. அதிக எண்ணிக்கையில் மரபணுக்களை பரப்பிக்கொள்பவற்களுக்கே வெற்றி. இந்த வெற்றியை பெற வேண்டுமானால் ஒவ்வொரு தாயும் தன் குட்டிகளுக்கு நல்ல ஜீன்ஸ், (மரபணுக்களை) மட்டும் கொடுத்தால் போதாது. இந்த மரபணுக்களை வைத்து சூழ்நிலைக்கு ஏற்றாற்மாதிரி எப்படி தன்னை தானே மாற்றிக்கொண்டு தொடர்ந்து ஆட்டத்தில் ஜெயிப்பது என்கிற வாழ்வியல் யுத்திகளான memes, மீம்ஸையும் குட்டிகளுக்கு சொல்லி தரவேண்டும். இப்படி சொல்லி தருவதில் பெண்குட்டிகளுக்கு வேறு மீம்ஸும் ஆண் குட்டிகளுக்கு வேறு மீம்ஸும் கற்பித்தாக வேண்டும்.

பெண் துணையை தேடிபோகாது, தானாய் வரும் துணையோடு சேர்வது மட்டும் தான் அதன் வேலை. ஆனால் ஆண் பெண்ணை தேடிக்கொண்டு போயாக வேண்டும். அதுவும் ஏதோ ஒரு பெண்ணோடு சேர்ந்துவிட்டால் குட்டிபிறக்காதே. தன் இனத்தை சேர்ந்த பெண்ணோடு கூடினால் மட்டும் தானே குட்டி பிறக்கும். ஆக, தன்னினம் என்பது எது? அதில் பெண் என்றால் எப்படி இருப்பாள், அவள் உடலை எப்படி கையாள வேண்டும் என்று தெரிந்திருக்க வேண்டும்…..அப்போது தான் அந்த குட்டி வெற்றிகரமாக தன் மரபணுக்களை பரப்பிக்கொள்ள முடியும்.

அதே போல பெண் குட்டிக்கு பிள்ளை வளர்ப்பு, பராமறிப்பு, வேட்டுவ வித்தைகள், அதை அடுத்த தலைமுறைக்கு சொல்லிதரும் யுத்திகள் ஆகிய மீம்களை தாய் சொல்லி தரவேண்டும். இப்படியாக ஆண்குட்டிகளுக்கு சில மீம்ஸ், பெண் குட்டிகளுக்கு வேறு சில மீம்ஸ் என்று இந்த எல்லா விவரங்களையும் தாய் தான் சொல்லித்தந்தாக வேண்டும். இதை எல்லாம் அவள் சொல்லித்தர தவறினால் அவள் குட்டிகள் அவள் மரபணுக்க்ளை செம்மையாக பரப்பாது, இப்படி பரப்பாமல் விட்டால் அவள் வம்சம் அழிந்துவிடும் அபாயம் இருக்கிறதே……..இந்த துரதுஷ்டம் நிகழக்கூடாது என்று தான் எல்லா ஜீவராசிகளிலும் தாய் மிக உஷாராக இயங்குகிறது. ஆண் குட்டி பருவம் அடையும் பிராயம் வந்ததும், அதை தன் கூட்டத்தை விட்டு வெளியேற்றி, வெளி பிரசேத பெண்களை தேடி போக தூண்டுகிறது. இதனால் புது புது பிரசேதங்களில் இந்த தாயின் மரபணுக்களை கொண்டு சென்று பரப்பி, அதிக மகசூல் பெற்று தருகிறது இந்த ஆண்குட்டி.

ஆக பிள்ளை பிராயம் முழுக்க குட்டியை தன்னுடனே வைத்து வித்தைகளை சொல்லித்தரும் தாய், அது பருவம் அடைந்துவிட்டால், விலகி அதை சுயேட்சையாக இயங்க விட்டு அதன் மூலம் தன் மரபணுக்களை பரப்பிக்கொள்கிறாள். இது தான் ஒரு தாயின் இயல்பு. பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் மனிதர்கள் காட்டுவாசிகளாக வாழ்ந்த போது, மனித தாய்மார்களும் மற்ற விலங்கின தாய்களை போலவே செயல்பட்டார்கள், அதனால் தன் குட்டி காடு மலை பள்ளத்தாக்கு என்று பிழைப்பு/துணை தேடி போவதை அவர்கள் தடுக்கவில்லை. மாறாக ஊக்குவித்தார்கள். இன்றும் காட்டுவாசிகளாக வாழும் பழங்குடி மனிதர்களில் இப்படி மகனை அம்மாவிடமிருந்து பிரித்து காட்டு வாழ்விற்கு தயார் படுத்தும் சடங்குகள் நடப்பதுண்டு. இதை ”coming of age ceremony” வயதிற்கு வருதல் சடங்கு என்போம்.

ஆஃப்ரிக்க பழங்குடி மனிதர்கள் பருவ வயதை அடைந்த ஆண்களை அம்மாவிடமிருந்து பிரித்து கொண்டுப்போய் ஒரு தனி கூடாறத்தில் அடைத்து, அந்த பையன்களின் தோலை சிறு கத்தியால் கீறி காயங்களை ஏற்படுத்துகிறார்கள். இந்த வலி, வேதனை, இதனால் ஏற்படும் இன்ஃபெக்ஷன், அது ஏற்படுத்தும் காய்ச்சல், தனி கூடாரத்தின் இருட்டு, எல்லாவற்றையும் தாண்டி அந்த பையன் பிழைத்தால் அவன் காட்டுவாழ்விற்கு உகந்தவன், சர்வைவலுக்கு ஃபிட் ஆனவன் என்று அவனை சீராட்டி, பாராட்டி, கடா வெட்டி கொண்டாடி,”முழுமைபெற்ற ஆண்” என்று பட்டம் கொடுத்து ஏற்றுக்கொள்கிறார்கள். அதுவே அந்த பையன் குழந்தை மாதிரி அம்மாவை கட்டிக்கொண்டு, அவளை விட்டு பிரிய மறுத்தாலோ, உடல் வலியை பொறுத்துக்கொள்ள முடியாமல் பாதியில் ஓடி போனாலோ, உயிர் பிழைக்க தவறினாலோ, அவனை முழு ஆண் என்று ஏற்கமாட்டார்கள்.

கிட்ட தட்ட இதே போன்ற மரபு, தமிழ் நாட்டிலும் அந்த காலத்தில் இருந்து வந்ததை நம் இலக்கியங்கள் வெளிபடுத்துகின்றன. தாயை ஒட்டிக்கொண்டு இருக்கும் மகன்களை நிஜ ஆண்கள் என்று யாரும் கருதியதில்லை. அவளை விட்டு பிரிந்து போர், வேட்டை, வியாபாரம், கல்வி, துறவு என்று வெளி பிரதேசங்களுக்கு போன ஆண்களை தான் நிஜ ஆண்களென கருதினார்கள். அதிலும் தன் உடம்பில் காயமே இல்லாத ஆண்களை முழு ஆண்கள் என்று ஆதி தமிழர்கள் ஏற்றுக்கொண்டதில்லை, அதனால் பிறந்த சின்ன குழந்தை ஏதோ காரணத்திற்க்காக இறந்துவிட்டால் அதை அப்படியே காயமற்று புதைப்பது அதன் ஆண்மைக்கு களங்கம் ஆகிவிடும் என்று அந்த குட்டியின் உடம்பை வாலால் கீறி காயப்படுத்தி, அவனை ”முழுமைபெற்ற ஆண்” ஆக்கிவிட்டு தான் அவனை புதைத்தார்கள்.

அந்த கால தமிழ் பெண்களும் ஆண் குழந்தைகளை தங்களின் தனி சொத்தாகவோ, முதுமைகாலத்து காப்பீடுகளாகவோ கருதவில்லை. புறநானூற்று தாய் ஒருத்தி தன் கடமைகளும் எதிர்பார்ப்புகளும் என்ன என்பதை தெள்ள தெளிவாக தெரியபடுத்துகிறாள்:

ஈன்று புறந்தருதல் என் தலைக்கடனே!

சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே!

வேல் வடித்துக் கொடுத்தல் கொல்லற்குக் கடனே!

நன்னடை நல்கல் வேந்தற்குக் கடனே!

ஒளிறு வால் அருஞ்சமம் முருக்கிக்

களிறு எறிந்து பெயர்தல் காளைக்குக் கடனே!

ஆக அந்த காலத்து தமிழ் தாய் தன் மகனிடம் எதிர்பார்த்ததெல்லாம், காளை மாதிரி போய் போரில் யானைகளை தோற்கடித்து, வென்றுவரும் வீரத்தை மட்டுமே. அப்ப மரபணுக்கள் என்கிறீர்களா? இவ்வளவு வீரம் இருக்கும் வெற்றியாளன் மரபணுக்களை பரப்பாமலா இருப்பான்!

இந்த காலத்து தமிழ் தாய் எப்படி இயங்குகிறாள் என்பதற்கு இந்த புது கவிதை ஓர் உதாரணம்: மழையில் பையன் நனைந்துவிட்டானாம். ”ஏன் குடை எடுத்துட்டு போகலை, சளி பிடிக்க போகுது, ஜூரம் வரப்போகுது, கொஞ்சம் கூட பொருப்பே இல்லை”, என்று அப்பா, அண்ணா, தங்கை என்று எல்லோருமே பையனை திட்டினார்களாம். அம்மா மட்டும், “என் பையன் வெளியெ போகுற நேரத்துலயா வந்து தொலைக்கணும் இந்த சனியன் பிடிச்ச மழை” என்று மழையை திட்டினார்களாம். என்ன தாய்பாசம்…..என்பதாக அமையும் இந்த தற்கால புதுகவிதை.

இந்த கவிதையில் வரும் அம்மா பையனுக்கு புத்தி சொல்ல மாட்டாள், அவனுடைய தப்பு என்று வெட்ட வெளிச்சமாக தெரிந்தாலும் பிறர் மீது பழி போட்டு தன் பிள்ளைக்கு பரிந்து பேசுவாள், அவனுக்கு வீரத்தை புகட்டாமல் அவனை வெறும் ஒரு குழந்தையாகவே கடைசி வரை பாவிப்பாள்…..இவை எல்லாம் தான் ஓர் அதர்ஸ் தாய்க்கு உண்டான அடையாளங்கள் என்று இந்த கவிதை சொல்லிக்கொள்கிறது.

இந்த இரண்டு கவிதைகளுக்கும் உள்ள கால இடைவெளி இரண்டாயிரம் ஆண்டுகள் மட்டுமே. அதற்குள் தமிழ் தாயின் சிந்தனையும் செயல்பாடும் இப்படி தலைகீழாக மாறிவிட்டனவே, ஏன்?
-Dr N Shalini ,www.linguamadarasi.blogspot.com
Labels: ஆனந்த விகடன் தொடர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக