மரபணு போட்டியில் ஜெயிக்க ஆண், “பெண்ணடிமைத்தனம்” என்கிற காயை நகர்த்தி, பெண்களை எல்லாம் நிராயுதபாணி ஆக்கினான். இதனால் பெண் ஆண்களை தரத்தின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து, கலவி கொண்டு, உயரக மரபணுக்களை மட்டும் பரப்பிய காலம் மலையேறி போனது. கல்வி, அறிவு, சொத்து, வருமானம், தனி நபர் சுதந்திரம், சுயமரியாதை, தனக்கென ஓர் அடையாளம் என்று எதுவுமே இல்லாமல் வெறும் ஒரு பிரசவ யந்திரமாய் பெண்கள் மாறிவிட, இந்த யந்திரங்களை அபகரித்து, அவற்றினுள் தம் மரபணுக்களை விதைத்து, மானாவாரி சாகுபடி செய்ய ஆரம்பித்தார்கள் ஆண்கள். இப்படி இவர்கள் ஆதிக்கம் செலுத்திக்கொண்டிருக்க, பெண்கள் மட்டும் சும்மா இருந்துவிடுவார்களா?
பெண் தான் பிறவி வேட்டுவச்சி ஆயிற்றே! ஆண் நகர்த்திய அதே காயை அவனுக்கு எதிராய் நகர்த்தி அவனுக்கே தெரியாமல் அவனை மீண்டும் தனக்கு அடிமையாக்கிக்கொண்டாள் பெண்…..எப்படி என்கிறீர்களா?
யுத்தி 1: அவள் உடம்பின் மீது ஆணுக்கு இருந்த மோகம் தான் அவளுக்கு தெரியுமே. அதனால் தன் உடல் பாகங்களை இன்னும் இன்னும் கவர்ச்சியாக வெளிபடுத்தி, ஆணை வசப்படுத்த முயன்றாள் பெண். ஆனால் இதில் ஒரு சிக்கல் இருந்தது. எல்லா பெண்களுக்குமே அதே உடல் பாகங்கள் தானே இருக்கின்றன. ஒருத்தியின் கவர்ச்சியை விட இன்னொருத்தி அதிகமாய் கவர்ச்சியை காட்டிவிட்டால் போச்சு, ஆண் கட்சி மாறிவிடுவானே, அப்புறம் எப்படி அவனை அடிமை படுத்துவதாம்?
யு 2: சமையல், சேவை, உபசாரனை என்றெல்லாம் அவனுக்கு பிடித்த படி நடந்து அவனுக்கு சோப்பு போட்டு வைத்தால், அவன் இவள் துணையை இதற்க்காகவாவது மீண்டும் மீண்டும் நாடுவானே….ஆனால் இதிலும் ஒரு பிரச்சனை இருந்தது. சமையலை ஆண்கள் கூட வெகு ஜோராய் செய்ய முடியுமே!. வேலையாள் கூட அவன் மனைவியை விட அதிக கீழ்படிதலுடன் சேவை, உபசாரனை மாதிரியான சமாசாரங்களை செய்து அசத்திவிட முடியுமே!
யு 3: படுக்கையில் அவனுக்கு பிடித்த மாதிரி எல்லாம் நடந்து அவனை அசத்தோ அசத்து என்று அசத்தி வைத்தால், ”என் மனைவி மாதிரி வருமா” என்று இவள் முந்தானையிலேயே விழுந்து கிடக்கமாட்டானா என்றால், ஊகூம். இவன் நினைத்தால் எத்தனை முறை வேண்டுமானாலும் படி தாண்டி, மாற்றான் தோட்டத்து மல்லிகைகளை முகர்ந்துவிடுவானே. ஆண், பெண், அரவாணி என்று யாரிடமும் சுகம் கொள்ளும் தன்மைதான் அவனுக்கு இருந்ததே. ஆக வெறும் கலவி சுகம் தந்து ஒரு ஆணை கட்டிபோடுவதென்பது முடியாத காரியமாகிவிடுமே.
யு 4: அந்த ஆணின் மரபணுக்களை கொண்ட குழந்தையை பெற்றெடுத்துவிட்டால், தன் ரத்தம் என்கிற பாசப்பிணைப்பில், ”என் குழந்தையை பெற்றவளாயிற்றே” என்கிற தனி சலுகை தருவானே. இப்படி குழந்தையை வைத்து கொஞ்சம் பவரை சம்பாதித்துக்கொள்வது தான் பெரும்பாலான பெண்களின் ஆட்ட யுத்தியாக இருக்கிறது. உதாரணத்திற்கு ராமயண தசரத சக்ரவர்த்தியை எடுத்துக்கொள்வோமே. சோசலை, சுமித்திரை, கைகேயீ, மூவருமே, தங்கள் குழந்தைகளை வைத்து தானே காய்களை நகர்த்தினார்கள்.
ஆனால் இதிலும் ஒரு பிரச்சனை: குழந்தை என்றால் எந்த குழந்தை? பெண் குழந்தை என்றால், அது இன்னொருவர் வீட்டிற்கு போய்விடும், காலம் முழுக்க அக்குழந்தையை வைத்து காய்களை நகர்த்த முடியாது. ஆனால் ஆண் குழந்தை? அப்பாவிற்கு பிறகு அவன் தான் குடும்ப பெயர், வருமானம், ஆஸ்தி, அந்தஸ்து என்று எல்லாவற்றையும் கட்டிக்காக்க போகிறவன். பெற்றோருடனே இருந்து, அவர்கள் மறைவிற்கு பிறகும் பித்ரு கடன்களை செய்ய கடமை பட்டவன்…….அதனால் ஆண் குழந்தையை பெற்றால், பெண்களுக்கு கையில் ஒரு ரெடிமேட் ஆயுதம் கிடைத்த திருப்தி. ஆனால் இதிலும் ஒரு பிரச்சனை. ஒரு வேளை, அவள் கணவனுக்கு பல தாரங்கள் இருந்து எல்லோருமே ஆண் குழந்தைகளாக பெற்றிருந்தால், அப்புறம் எல்லா மனைவியருக்குமே சமமான பவர் என்றாகிவிடுமே. இப்படி இருந்தால் ஒருத்தி மட்டும் தன் பிழைப்பு விகிதத்தை எப்படி அதிகரித்துக்கொள்ள முடியும்?
யு 5: கொண்டவனை நம்பினால் தானே இப்படி கண்டவளோடு போட்டியிடும் நிலைமையே. தானே பெற்றெடுத்த தன் மகனை தனக்கு சாதகமாக வளர்த்து, கடைசி வரை அவனையே தனக்கு துணையாக வைத்துக்கொண்டால், எப்படியும் ஒரு காலத்தில் தந்தையின் எல்லா பவரும் அவனுக்கு தானே வந்து சேரும். அட தந்தையின் பவர் இல்லாவிட்டாலும், தனக்கென்று உள்ள ஆற்றலினால் மகன் சாதித்துவிட்டால், அவனை தன்னுடனே தக்க வைத்துக்கொள்வது, இந்த தாய்க்கு சாதகம் ஆகாதோ? அவனுக்கு ஆயிரம் மனைவியர் கிடைக்கலாம், ஆனால் தாய் என்றால் இவள் ஒருத்தி மட்டும் தானே?
ஆக ஆண் பெண்ணை அடிமை படுத்தி, அவளை வெறும் ஒரு பிரசவ யந்திரமாக பயன்படுத்தினான். ஆனால் பெண்ணோ, தன் பிரசவ இயத்தையே ஒரு எதிர் யுத்தியாக பயன்படுத்தி, தன் ஆண் குழந்தையை தனக்கு அடிமையாக்கிக்கொண்டாள்.
அதெப்படி, பெண்ணுக்காவது கல்வி அறிவில்லை, ஆனால் ஆண் அறிவில் சிறந்தவன், உலகம் அறிந்தவன், பெண்ணை காட்டுலும் பல விதங்களில் வலிமையானவன். இப்பேற்பட்ட ஆண் எப்படி பெண்ணுக்கு அடிமையாகி போனான்? எப்படி இதை அனுமதித்தான் என்றெல்லாம் உங்களுக்கு ஆட்சட்யமாக இருக்கிறதா? இவ்வளவு வலிமையான இந்த ஆணை அடக்கும் பல அங்குசங்கள் பெண்ணின் கையில் இருந்தனவே. அதுவும் தான் பெற்றெடுத்து, வளர்த்த பிள்ளை என்றால் அவனை எப்படி எல்லாம் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க வேண்டும் என்பது இவளுக்கு தெரியாதா! யாரோ ஒருத்தி பெற்ற ஆணான தன் கணவனையே தன் கட்டுபாட்டிற்குள் கொண்டுவர, அவ்வளவு யத்தனிக்கும் இவளுக்கு, தானே பெற்ற மகனை தன் ஆதிக்கத்தினுள் கொண்டுவருவது பெரிய காரியமா என்ன?
ஆணின் மிக பெரிய தவறே, “போயும் போயும் பெண் தானே, இவளால் இனி என்ன செய்ய முடியும்?” என்கிற குறைந்த மதிப்பீடு தான். அவளிடம் அவன் எச்சரிக்கையாகவே இருப்பதில்லை. அதிலும் தன்னை பெற்ற தாய் என்றால் அவனுக்கு சந்தேகமே வருவதில்லை. பெண்கள் எல்லாம் சுத்த மோசம் என்று பொத்தம் பொதுவாய் பாடிவைத்த பட்டினத்தார் மாதிரியான ஆசாமிகள் கூட தன்னை பெற்ற தாய் என்றதும், “தாயை சிறந்த கோயில் இல்லை” என்று போற்றத்தானே செய்தார்கள். ஆண்களுக்கு இயல்பிலேயே இருக்கும் இந்த எடிபெஸ் காம்பிளெக்ஸ் தான் அவர்களின் மிக பெரிய பலவீனம். இந்த ஒரு பலவீனம் போதாதா? இதை வைத்தே, தன் மகனை கடைசி வரை தனக்கு அடிமையாகவே வைத்திருக்க பெண்கள் பல ரகசிய யுத்திகளை மிக பகிரங்கமாகவே பயன் படுத்துகிறார்கள். அவை என்னென்ன என்று உங்களால் யூகிக்க முடிகிறதா? இல்லையா, அட்சர்யங்களுக்கு காத்திருங்கள், அடுத்த இதழில்…….
- Dr N Shalini
Labels: ஆனந்த விகடன் தொடர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக