அம்மா செண்டிமெண்ட்
தமிழக முதல்வர் எப்போது தொலைகாட்சியில் தோன்றினாலும், அவருக்கு வலது பக்கமாய் ஆளுயர பெண் சிலை ஒன்று தெரியும். அவருடைய அம்மா அஞ்சுகத்தின் சிலை. தலைவருக்கு தாய் பாசம், அதனால் அம்மாவின் நினைவாக தத்ரூபமான சிலையை வடித்து தன் பக்கத்திலேயே வைத்திருக்கிறார்….ஆனால் ஒன்று கவனித்தீர்களா? முதல்வர் அவருடைய அப்பாவுக்கு ஒரு சிலையை வைக்கவே இல்லையே? ஏன்?
தமிழக முன்னால் முதல்வர் மக்கள் திலகம் எம் ஜி ஆர் கூட அன்னை சத்யாவின் பெயரில் அத்தனை ஸ்தாபித்தார், ஆனால் அப்பா கோபாலனின் பெயரை எந்த நிருவனத்துக்கும் வைக்கவில்லையே, ஏன்?
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ”அம்மா என்று அழைக்காத உயிரில்லையே” என்று உருகி உருகி பாடினாரே, அப்பாவை பற்றி ஒரு வரி கூட பாடவில்லையே, ஏன்?
இவர்கள் என்ன? சாமானிய மனித ஆண்கள் அனைவருக்குமே அவர்கள் அம்மா தான் தெய்வம். அம்மா செண்டிமெண்ட் தான் உலகின் உச்ச கட்ட செண்டிமெண்ட். அப்பாவை அடிக்க கை ஓங்கும் மகன்கள் கூட அம்மா என்றால் அடங்கி போகிறார்கள். இந்த நிலை இந்தியாவில் மட்டும் இருப்பதில்லை. உலகெங்கும் உள்ள எல்லா மட்டத்து மனிதர்களுமே இப்படி தான் இருக்கிறார்கள். ஏன்? இந்த கேள்விக்கு பல பேர் பல பதில்களை முன்வைக்கிறார்கள்.
சிக்மெண்ட் ஃப்ராய்ட் சொன்ன பதில் தான் உலகை உலுக்கிய முதல் பதில்: எல்லா ஆண் குழந்தைகளுக்குமே தன் தாய் தான் முதல் காதலி. 2 – 3 வயதில் இவளை ரசித்து, இவள் எனக்கே எனக்கு தான் என்று உரிமை கொண்டாடுகிறார்கள் ஆண் குழந்தைகள். இதை எடிபெஸ் காம்ப்லெக்ஸ் என்றார் ஃபிராய்ட். அநேகமான ஆண்கள் 5 – 6 வயதிலேயே இந்த எடிபெஸ் காம்ப்லெக்ஸிலிருந்து மீண்டு விடுகிறார்கள், அம்மா என்பவள் அப்பாவின் மனைவி, நான் வளர்ந்து அப்பாவை போல பெரியவன் ஆன பிறகு எனக்கே எனக்கென்று வேறொருத்தியை மணந்துக்கொள்வேன் என்கிற புரிதலுக்கு மாறூகிறார்கள். ஆனால் சில ஆண்கள் இப்படி மீளாமல் தொடர்ந்து அம்மாவையே ஓவராய் நேசிக்கிறார்கள், எடிபெஸ் காம்ப்லெக்ஸில் சிக்கிக்கொள்கிறார்கள் என்றார் ஃபிராய்ட்.
அடுத்த பதிலை சொன்னவர் ஹாரி ஹார்லோ என்கிற அமேரிக்க விஞ்ஞானி. இவர் குரங்குகளை வைத்து, தாய் சேய் உறவை பற்றிய ஆராய்ச்சிகளை செய்தவர். இவர் தன் ஆராய்ச்சியில் குட்டி குரங்கை பிறந்த உடனே தன் தாயிடமிருந்து பிரித்து வளர்த்தார். ஆனால் வேளா வேளைக்கு உணவையும், விளையாட்டு பொருட்களையும் கொடுத்து ஊக்குவித்தார். இப்படி தன் தாயை சந்திக்காமலேயே தனிமையில் வாழ்ந்த இந்த குரங்கு பிற்காலத்தில் பிற குரங்குகளுடன் எப்படி பழகுகிறது என்று பரிசோதித்து பார்த்தால், ஊகூம், மற்ற குரங்குகளின் பக்கத்திலேயே போகவில்லை குட்டி. சரி, மற்ற குரங்குகளுடம் தான் விளையாடவில்லை, குறைந்த பட்சம் பெண் குரங்கை கண்டால் கூடவாவது தோன்றுதா என்று பார்த்தால், ஊகூம், பெண்ணை சீண்டக்கூட விரும்பவில்லை இந்த விசித்திர குட்டி. இதிலிருந்து ஹார்லோ கண்டுபிடித்த விஷயங்கள்: தாய் சேய் உறவு தான் குழந்தையின் சமூக பழக்க வழக்கங்களுக்கும், எதிர்கால காம உறவுக்கும் ஆதாரமே. அப்பா இல்லை என்றால் நஷ்டமில்லை, ஆனால் அம்மா இல்லையென்றால் முதலுக்கே மோசமாகிவிடும். அதனால் குரங்குகளில் மட்டுமல்ல, எல்லா உயிரினத்திலும் தாய்வழியாக தான் சமூகம் அமைகிறது. மனிதர்கள் உட்பட. இது தான் இயற்கையின் விதி.
இதை நிரூபவிப்பது போல லண்டன் ஸூவில் ஒரு சம்பவம் நடந்தது. அந்த ஸுவின் காப்பாளர் டெஸ்மண்ட் மோரிஸுக்கு அப்போது குழந்தை இல்லை. அதனால் அவர் மனைவி அங்கிருந்த காங்கோ என்கிற குட்டி சின்பான்சியை தன்னுடனேயே வைத்து, வளர்க்க ஆரம்பித்தார். காங்கோ சட்டை போட்டு கொள்ளும், ஸ்பூனில் சாப்பிடும், கழிப்பறையை பயன்படுத்தும், அவ்வளவு என்ன மிக அற்புதமாய் ஓவியம் வரையும். காங்கோ வரைந்த ஓவியங்களை ஒரு கண்காட்சியில் வைத்தார் மோரிஸ். பிகாசோவின் ஓவியத்தை விட அதிக விலை கொடுத்து இதை வாங்கினார்கள் கலைஆர்வளர்கள். அத்தனை சுட்டியாக, சமர்த்தாக இருந்த காங்கோ கடைசிவரை இனபெருக்கமே செய்யவில்லை, ஏன் என்று ரொம்ப காலம் சோதித்து பார்த்தார் மோரிஸ். கடையில் தான் அவருக்கு புரிந்தது: காங்கோ மனித பெண்ணால் வளர்க்க பட்டபடியால் அது தன்னையும் மனிதன் என்றே நினைத்திருந்தது, அதனால் திருமதி மோரிஸ் மாதிரியான பெண்களை தான் அதற்கு படித்தது. சின்பான்சி பெண்களை அதற்கு பிடிக்கவில்லை. ஆக, “நீ இந்த இனம்” என்கிற ஜீவ அடையாளத்தை தருவதே தாய் சேய் உறவு தான், அதனால் தாய் எந்த இனமோ அந்த இனத்திலேயே துணை தேடுவது தான் உயிரினங்களின் கலவியல் லாஜிக் என்று விளக்கினார் டெஸ்மெண்ட் மோரிஸ்.
இதற்கு ரொம்ப வருடங்கள் கழித்து மைக்கேல் மீனி என்பவர் எலிகளின் தாய் சேய் உறவை பற்றி ஆராய்ச்சி செய்யும் போது, இன்னொரு முக்கியமான விஷயத்தை கவனித்தார். தாய் எலிகள் குட்டி எலிகளை நாவால் தடவி சுத்தம் செய்யும். அதிலும் ஆண் குட்டி என்றால் கூடுதல் நேரத்திற்கு இப்படி தடவிக்கொண்டிருக்கும். ஏன்? என்று அந்த ஆண் குட்டிகளின் மூளை பரிசோதித்து பார்த்தால் தெரிந்த திடுக்கிடும் தகவல்: தாயால் இப்படி வருடப்பட்ட ஆண் எலிகளுக்கு மூளையில் புதிய இணைப்புக்கள் உருவாகி இருந்தன. ஆனால் தாய் வருடாமல் விட்ட ஆண்களுக்கு இந்த இணைப்புக்கள் ஏற்படவே இல்லை. இந்த இணைப்புக்கள் தான் எலி குட்டியின் எதிர்கால கலவியல் தேர்வுகளை முடிவுசெய்கிறன, ஆக ஆண் குட்டியின் கலவியல் விசையை உருவாக்குவதே அம்மா தான்.
ஃபிராய்ட், ஹார்லோ, மோரிஸ், மீனி ஆகிய எல்லோருமே ஒன்றையே தான் திரும்ப திரும்ப நிரூபவித்துக்கொண்டிருக்கிறார்கள். எல்லா ஜீவராசியிலும் ஆண்குட்டிக்கும் அதன் தாய்க்கும் ஒரு பிரத்தியேகமான பாச பிணைப்பு இருந்து வருகிறது. இந்த பந்தம் தான் சுய அடையாளம், எதிர்பாலின அடையாளம், சமூக நடத்தை, கலவியல் தேர்வுகள் ஆகிய அனைத்து முக்கியமான விஷயங்களையும் நிர்ணயிக்கிறது. அதனால் இயற்க்கை இந்த தாய் சேய் பந்தத்தை மேலும் அழுத்தமாக வலியுறுத்துகிறது. இதனால் தான் எல்லா ஜீவராசி குட்டிகளும் அம்மா செண்டிமெண்டுக்கு ஆட்பட்டு போகிறதுகள். இப்படி கண்மூடித்தனமாக அம்மாவை நேசிப்பது பிள்ளை பிராயத்தில் இந்த குட்டியின் பிழைப்பு திறனை அதிகரிக்கும்.
ஆனால் வயதுக்கு வந்து இனபெருக்க பருவத்தை அடைந்துவிட்டால் ஆட்டவிதிகள் அப்படியே மாறிவிடும். அதன் பிறகு அம்மாவை கட்டிக்கொண்டு இருப்பது மரபணுமுன்னேற்றத்தையும் பிழைப்பையும் பாதித்துவிடும், அதனால் அம்மாவை மறந்து அடுத்த தலைமுறையை நோக்கி போயாக வேண்டும். இப்படி போவதை அம்மாவே ஊக்குவிக்கும். மற்ற எல்லா உயிரினத்திலும் இயற்கையின் இந்த இரட்டை நிலை அமைப்பு மிக கச்சிதமாக வேலை செய்கிறது. ஆனால் மனிதர்களில் மட்டும் இது மக்கர் செய்கிறது…..ஏன் தெரியுமா?
Posted by Dr N Shalini,www.linguamadarasi.blogspot.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக