ஞாயிறு, 27 மார்ச், 2011

பெண்பாலின் நிஜமுகம்

மோசமான மாமியார்கள் ஏன் உருவாகிறார்கள்? அதெப்படி இந்திய ஆண்களுக்கு மட்டும் தன் அம்மாவின் குறைகள் எதுவுமே கண்ணில் தெரிவதே இல்லை? என்று பல வாசகிகள் ஃபோனிலும் நேரிலும் போட்டு தொலைத்தெடுத்துவிட்டார்கள். ஆண்களை விடுங்கள், பெண்களுக்கே கூட தெரியாத ஓர் அறிவியல் ரகசியம் என்ன தெரியுமா? ஆண்களை விட பெண்களுக்கு தான் பவர் வேட்கை அதிகம்.

உலகெங்கும் இருக்கும் சர்வ ஜீவராசிகளின் பெண்பாலினத்தை கூர்ந்து கவனித்தால் வெட்டவெளிச்சமாக தெரிந்துபோகும் உண்மை, the female of the species is deadlier than the male அதாகப்பட்டது எல்லா உயிரிலும் பெண்பாலே மிக ஆபத்தானது. காரணம் பெண்பாலுக்கு தான் ஆணைவிட அதிகபட்ச வேட்டுவகுணமும் பிழைக்கும் திறனும் இருக்கிறது. இப்படி இருந்தாகவும் வேண்டும், காரணம், குட்டிகளுக்கு இரை தேடுவதும், அவற்றுக்கு வேட்டையை கற்றுத்தருவதும் பெண்ணின் வேலை தானே….இவள் சிறந்த வேட்டுவச்சியாக இருந்தால் தானே அவள் குட்டிகள் பிழைக்கமுடியும். அதனாலேயே இயற்கை பெண்களை பிறவி வேட்டைகாரிகளாக படைக்கிறது. மனிதர்களிலும் அப்படித்தான், ஆனால் ஒரு சின்ன வித்தியாசம், பிற பெண்பாலினம் நேரடியாக தன் வல்லமையை வெளிபடுத்தும். தனக்கு வேண்டிய பவரை தானே போராடி பெற்றுக்கொள்ளூம்.

ஆனால் மனித பெண்கள் தங்கள் பவர் தேவைகளை இப்படி நேரடியாகவோ பகிரங்கமாகவோ தீர்த்துக்கொள்வதில்லை. எல்லாமே மறைமுக தாய்வழி ஆதிக்கமாய் தான். காரணம் பிற ஜீவராசி தாய்கள் யாரையும் அண்டிப்பிழைப்பதில்லை, சுயமாக வாழ்கின்றன. ஆனால் மனித தாய்க்கு மட்டும் சமீபத்திய சில காலம் வரை யாரைவாவது, அண்டி பிழைக்க வேண்டிய நிர்பந்தம் இருந்தது, காரணம் நம் சமூக அமைப்பில் எல்லா அதிகாரங்களும் ஆண்களிடமே இருந்தன. அதனால் யாரையாவது ஒரு ஆணை பிடித்து, அவன் மேல் ஒரு ஒட்டுண்ணியாய் வாழ்ந்தாலே ஒழிய இவளுக்கென்று ஒரு வாழ்க்கையே இல்லை என்கிற நிலை தான் மனித பெண்களுக்கு.

ஆக இயற்கையின் விதிப்படி பெண் வேட்கையில் சிறந்தவளாய் இருந்தாக வேண்டும், ஆனால் மனித சமூக அமைப்பில் அவளுடைய வேட்டுவகுணம் வெளியே தெரிந்தால் ஆண்கள் ஆட்சேபிப்பார்கள். இந்த முரண்பாட்டை சரி செய்யவும் பெண்கள் பல வழிகளை வைத்திருந்தார்கள்.

முதல் வழி: மற்ற மிருக பெண்களை போல தானே வேட்டைக்கெல்லாம் போய் நேரத்தை விரயம் செய்யாமல் ஒரு ஆணை தேர்ந்தெடுத்து, அவனுக்கு பதி/புருஷன்/பிராணநாதா/பிரபோ என்கிற பதவிகளை கொடுத்து, அவனுக்கு கொம்பு சீவிவிட்டு, அவனை வேட்டைக்கு அனுப்பி, அவன் மூலமாய் உணவு, ஆதாயம், ஆற்றல் என்று பல வசதிகளை பெற்றுக்கொள்வாள். இந்த ஆணும் லொங்கு லொங்கென்று இவளுடைய ஆசைகளை நிறைவேற்ற தன் ஒட்டு மொத்த வாழ்நாளையே அற்பணித்துவிடுவான். தன் பங்கிற்கு இந்த பெண் அவனுடைய மரபணுக்களை மட்டும் பரப்பித்தர தன் கர்பப்பையை பயன்படுத்துவாள். இந்த கொடுக்கல் வாங்கல் திருப்தி கரமாய் இருந்தால் எல்லாம் ஓகே. ஏதோ காரணத்திற்க்காக, இந்த பெண் எதிர்பார்த்த அளவுக்கு இந்த ஆண் வேட்டையாடி வெற்றியை குவிக்கவில்லை என்றால் அடுத்து அந்த பெண் என்ன செய்வாள் தெரியுமா?

2) முன்பு தேர்ந்தெடுத்த ஆணை கழற்றிவிட்டு, இன்னொரு புதிய ஆணை அந்த பதவிக்கு உயர்த்திவிடுவாள். இப்படி பகிரங்கமாக இன்னொரு ஆணுடன் கூட தைரியம் இல்லாத பெண் என்ன செய்வாள்? 3) கள்ளத்தனமாக, ரகசியமாக வேறொரு ஆணுடன் கூடி, அவன் மூலமாய் தன் காரியங்களை சாதித்துக்கொள்வாள்.

4) இப்படி பகிரங்கமாகவோ, ரகசியமாகவோ தன் தேவைகளை தீர்த்துக்கொள்ள வாய்ப்புகள் அமையாத பெண் என்ன செய்வாள்? தன் மகனை வைத்தே தன் எல்லா nonsexual தேவைகளையும் தீர்த்துக்கொள்வாள். பல இந்திய குடும்பங்களின் நிலை இது தான். ”இந்த மனிஷனை கட்டிக்கிட்டு நான் என்ன சுகத்தை கண்டேன்? இந்த ஆள் சுத்த வேஸ்ட்! நீயும் அப்படி இருந்துடாதேடா, அம்மா உன்னை நம்பி தான் இருக்கேன், என் பிள்ளை தான் என்னை கரைசேர்க்கணும்” என்று புலம்பி, அழுதுவைத்தால் போதும். என்னமோ உலகத்தில் இவனுக்கு மட்டும் தான் தாய்பாசம் பொத்துக்கொண்டு வந்துவிட்டது போல உடனே பையன் அம்மாவை ”சந்தோஷமா வெச்சிக்கணும்” என்று சந்தனமாய் இழைய ஆரம்பித்துவிடுவான். ”அம்மா கஷ்டப்படும் போது, நான் மட்டும் எப்படி என் பொண்டாட்டியோடு தனியா ஹனிமூன் போறது” என்றூ அங்கேயும் அம்மாவை மடியில் கட்டிக்கொண்டு போன மடசாம்பிராணிகள் நம்ம ஊரில் இருக்கிறார்கள்! இந்த ஆடவர் குல திலங்களுக்கு தெரிவதே தெரியாது, இவர்கள் இப்படி அரும்பாடுபட்டு வீடு, வசதி, புடவை, நகை, உணவு, ஊருலா என்று ஆற்றுவதெல்லாம் ஒரு மகன் தன் தாய்க்கு செலுத்தும் நன்றியை அல்ல, ஒரு கணவன் கொண்டவளுக்கு செய்யும் கடமையை என்று. இப்படி தன் ஆண்குழந்தையை கணவன் ஸ்தானத்திற்கு உயர்த்தி அவன் மூலமாய் தன் பவர் தேவைகளை தீர்த்துக்கொள்ளும் பெண்கள் இந்தியாவில் ஏராளம். காரணம், மறுமணம் செய்துக்கொள்ளும் சுதந்திரமோ, கள்ள உறவு வைத்துக்கொள்ளும் தைரியமோ, நம்மூர் பெண்களுக்கு பெரும்பாலும் இருப்பதில்லை. அதனால் தங்கள் மகனை வைத்தே தங்கள் ஆட்டத்தை ஆடிமுடிக்க பார்க்கிறார்கள்.

5) சரி மகனே பிறக்கவில்லை, அல்லது பிறந்ததும் உதவாக்கரையாகிவிட்டதென்றால், அடுத்து அந்த தாய் என்ன செய்வாள்? தனக்கு பிறந்த மகளையே ஒரு மகன் மாதிரி வளர்த்து, அந்த பெண்ணை “the man of the family” என்கிற அந்தஸ்த்துக்கு உயர்த்தி, ஒட்டுண்ணி மாதிரி அந்த மகளை உறிந்து வாழ்வாள் தாய்.

6) இந்த எந்த வழியும் வேலை செய்யவில்லை, என்றால் கடைசி கட்டத்தில் பெண்ணே கோதாவில் குதித்து சுயமாய் போராட ஆரம்பித்துவிடுவாள். ஜான்சி ராணி மாதிரியும், கித்தூர் செங்கமா மாதிரியும். தங்கள் ஆக்ரோஷத்தை வெளிபடுத்தி பவர் தேவையை தானே சுயமாய் பூர்த்திசெய்துக்கொள்ளும் பெண்களை, கண்டு வியப்போம் அல்லது, ”சே, பொம்பளையா அடக்கமா இருக்கானு பார்றேன்” என்று மிக துச்சமாய் விமர்ச்சிப்போம். ஆனால் பால் வடியும் முகத்திற்கு பின்னால் அம்மா செண்டிமெண்ட் எனும் பிரம அஸ்திரத்தை தனக்கு சாதகமாய் பயன்படுத்தும் பெண்களை பார்த்தால், கை எடுத்து கும்பிடுவோம்…….அந்த அளவுக்கு கைதேர்ந்த வித்தகி பெண் என்று புரியாமலேயே.

இதில் பெரிய வேடிக்கை என்ன தெரியுமா? பெண்கள் எல்லா காலத்திலும் இந்த ஆறு வழிகளையும் பயன்படுத்திக்கொண்டே தான் இருக்கிறார்கள், தங்கள் ஆதிக்க ஆசைகளை தீர்த்துக்கொள்ள. ஆனால் நம் கண் முன்னாலேயே இது நடந்துக்கொண்டே இருந்தாலும் நமக்கு இது உரைப்பதே இல்லை. அதுவும் இந்த ஆட்டத்தை ஆடுவது நம் அம்மா என்றால் நம்மால் அதை உணரவே முடிவதில்லை…..லேசாய் பொறி தட்டினாலும் ”சே சே எங்கமா அப்படி இல்லப்பா” என்று நம்மை நாமே ஏமாற்றிக்கொள்கிறோம். ஏன் தெரியுமா? இது பற்றி எல்லாம் அடுத்த இதழில்…..
Posted by Dr N Shalini ,www.linguamadarasi.blogspot.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக