பார்த்ததில் பிடித்தது இது போன்று நிறைய ஆங்கில படத்திற்கு விமர்சனத்துடன் கூடிய முழு வீடியோ படமும் உள்ளது .
http://kanuvukalinkathalan.blogspot.comதில்
பதினான்கு வயது நிரம்பிய சிறுமி Mattie Ross, தன் தந்தையை கொலை செய்தவனான Tom Chaney ஐ சட்டத்தின் முன்பாக நிறுத்தி வஞ்சம் தீர்ப்பதற்காக Rooster Cogburn எனும் சட்டத்தின் காவலனை தெரிவு செய்கிறாள். தன் தந்தையை கொன்றவனை தேடிச் செல்லும் தேடுதல் வேட்டையில், மார்ஷல் ரூஸ்டர் கொக்பர்னுடன் பிடிவாதமாக தானும் இணைந்து கொள்கிறாள் மேட்டி ரொஸ்…..
ஒரு குடிகார மார்ஷல், வஞ்சம் தீர்ப்பதற்கு திடமான மனவுறுதி கொண்ட ஒரு சிறுமி, ஒரு கொலைக் குற்றவாளி, அதே கொலைக் குற்றவாளியை நீண்டகாலாமக தேடி வரும் LaBoeuf எனும் டெக்ஸாஸ் ரேஞ்சர், இவர்கள் இணைந்து செல்லும் மனித வேட்டை. இதுதான் Joel மற்றும் Ethan Coen இயக்கியிருக்கும் True Grit எனும் நாவலின் சமீபத்திய தழுவல் வடிவத்தின் சுருக்கமான கதை. Charles Portis என்பவர் எழுதிய இந்நாவல் ஏற்கனவே வெஸ்டெர்ன் ஜெமினி கணேசன் ஜான் வெய்ன் அவர்களின் நடிப்பில் 1969ல் வெள்ளித்திரைகளில் வெளியாகி இருக்கிறது.
படத்தின் பிரதான பாத்திரமாக சிறுமி மேட்டி ரொஸ்ஸைத்தான் என்னால் காண முடிகிறது. படத்தின் ஆரம்பக் காட்சிகளிலேயே அசத்த ஆரம்பிக்கும் மேட்டி ரொஸ், இறுதி வரை அதனை தொடர்கிறாள். இறந்துபோன தந்தைக்குப் பதிலாக வியாபார பேச்சு வார்த்தைகளில் அவள் ஈடுபடும் காட்சி அபாரம். தன் வாதங்களால் சிறுமி மேட்டி ரொஸ் தனக்கு வேண்டியவைகளை பெரும்பாலான சமயங்களில் வென்றெடுத்துக் கொள்ளுகிறாள். குடிக்கு விலை போன மார்ஷலான ரூஸ்டர் கொக்பர்ன்கூட அவள் வாதத் திறமையை கண்டு வியந்துதான் போகிறான். வஞசம், அதற்கான ஒரு விலையையும் தன்னுடன் கொண்டே அலைந்து திரிகிறது என்பதையும் இறுதியில் மாட்டி ரொஸ் அறிந்து கொள்கிறாள். ஆனால் அவள் மனவுறுதி குறைவதே இல்லை.
நீதியை நிலை நாட்ட துப்பாக்கி இன்றியமையாத ஒன்றாகும் எனும் நிலைப்பாட்டைக் கொண்ட மேற்கில், ரூஸ்டர் கொக்பர்ன் [Jeff Bridges] போன்ற மார்ஷல்களின் திறமை அவர்கள் சட்டத்தின் முன்பாக நிறுத்திய குற்றவாளிகளின் எண்ணிக்கையைவிட, தம் துப்பாக்கிகளால் அவர்கள் பலி கொண்ட குற்றவாளிகளின் எண்ணிக்கையினாலேயே அளவிடப்படுகிறது. குற்றவாளிகளை கையாள்வதில் ரூஸ்டர் கொக்பர்னின் முறைகள் குறித்த எதிர்ப்புக்கள் சட்டத்தின் முன்பாக வாதிக்கப்பட்டாலும், ரூஸ்டர் அவற்றை மதிப்பதேயில்லை. அவன் வழங்கும் நீதி அவன் கொண்ட அறங்களை சார்ந்தது. ஆனால் திரைப்படத்தில் ரூஸ்டர் பாத்திரம் ஒரு குடிகாரனாக, தன் வாழ்க்கை குறித்து அலட்டிக் கொள்ளாத ஒருவனாக சித்தரிக்கப்பட்டிருக்கிறது. வயதாகி, உடம்பு பெருத்து முன்புபோல் சக்தி நிறைந்த நிலையில் செயற்பட முடியாவிடிலும் கூட எடுத்த காரியத்தை முடிப்பதில் தனக்குரிய எல்லைகளை அறிந்திருக்கிறான் ரூஸ்டர். தன் திறமைகள் மேல் சந்தேகம் கொள்பவர்கள் முன்பாக தன் திறமைகளை செயற்படுத்திக் காட்டுவதில் அவன் ஒரு கோமாளிபோல் நடந்து கொள்கிறான். திரைப்படத்தின் இறுதியில் அவன் வாழ்வு ஒரு சர்க்கஸில் நிறைவுறுவதாக காட்டியிருப்பார்கள். ஆனால் உண்மையில் அவன் வாழ்வு முழுவதுமே ஒரு சர்க்கஸ்தான் என்பதை நுட்பமாக சொல்லியிருக்கிறார்கள் இயக்குன சகோதரர்கள்.
டாம் சேனி எனும் கொலைஞனை நீண்ட காலமாக தேடி வரும் லாவொஃப் எனும் டெக்ஸாஸ் ரேஞ்சர் பாத்திரத்தில் நடித்திருக்கும் நடிகர் மாட் டாமொனின். ஒப்பனை மற்றும் ஆடை அலங்காரங்கள், குறிப்பாக சுங்கான் புகைக்கும் பாணி என்பன சிறப்பாக இருக்கிறது. அடங்க மறுக்கும் குதிரைகளை அடக்குவதுபோல் சிறுமி மேட்டி ரொஸ் மீது வன்முறையையும் பிரயோகிக்க தயங்காத பாத்திரம் லாவொஃபினுடையது. குறிபார்த்து சுடுவதிலும், தடங்களை பகுப்பாய்வதிலும் நிபுணனான இப்பாத்திரம் எந்த ஒரு நடிகராலும் சிறப்பாக செய்யப்படக்கூடிய ஒன்றே. மாட் டாமொனின் பெயர் அதன் பிரபலத்திற்காக பயன்பட்டுப்போக அவர் நடிப்பு வறண்ட நிலங்களில் நீரைத் தேடி அலையும் ஆன்மாவாக அலைகிறது. டாம் சேனியாக வேடமேற்றிருக்கும் சிறப்பான கலைஞர் ஜோஸ் ப்ரோலான் கூட தன் திறமையை காட்டும் வாய்ப்பு சிறிதளவேனும் வழங்கப்படாத நிலையில் பரிதாபமாக தோன்றி மறைகிறார். இதெல்லாம் கோஎன் சகோதரர்களிற்கான சோற்றுக் கடனா என்று தெரிய ஆர்வமாகவிருக்கிறேன்.
கோஎன் சகோதர்களின் நுட்பமான நகைச்சுவை படத்தில் ஆங்காங்கே மிளிர்கிறது, தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட உள்ள குற்றவாளிகளில் வெள்ளை இனத்தவர்க்கு கடைசி வார்த்தை பேச உரிமை இருப்பதையும், அமெரிக்க பூர்வ குடிகளிற்கு அந்த உரிமை மறுக்கப்படுவதையும், பூர்வ குடிச் சிறுவர்களை மார்ஷல் ரூஸ்டர் காக்பர்ன் தன் பூட்ஸ் கால்களால் உதைத்து மகிழ்வதையும் ரசிகர்களை சிரிக்க வைக்கும் வண்ணம் காட்சிப்படுத்தும் அதே சமயத்தில் அதன் தீவிரத்தையும் இயக்குனர்கள் உணர்த்திவிடுகிறார்கள். தேடல் பயணத்தின்போது ரூஸ்டரிற்கும், லாவொஃபிற்கும் இடையில் நிகழும் கிண்டல் கலந்த பரிமாற்றங்கள் சிரிக்க வைக்கின்றன, குறிப்பாக துப்பாக்கி சுடும் திறமையை நிரூபிக்க ரூஸ்டர் போதையில் எடுக்கும் முயற்சிகள். எதற்காக இந்தப் பாத்திரம் என கேள்வி எழுப்ப வைக்கும் ஒரு பாத்திரம் படத்தில் உண்டு. கரடித்தோல் அணிந்து சடலங்களிற்காக பண்டமாற்று செய்யும் மருத்துவர்! பாத்திரம்தான் அது. வினோதமான ஒலி எழுப்பி மகிழும் ஒரு கொள்ளையனையும் இதில் சேர்த்துக் கொள்ளலாம்.
படத்தின் ஒளிப்பதிவு அபாரம். அதனுடன் கூடவே வியக்க வைப்பது சிறுமி மேட்டி ரொஸ்ஸாக வேடமேற்று ஆச்சர்யப்படுத்தும் வகையில் திறமையை காட்டியிருக்கும் இளம் நடிகை Hailee Stenfeld ன் அபாரமான திறமை. இவர் திறமையின் முன்பாக ஜெஃப் பிரிட்ஜ்ஜஸின் நடிப்பு பிரகாசம் குன்றியே காணப்படுகிறது. அதன் காரணமாகவே அவரை மட்டும் முன்னிறுத்தும் போஸ்டரை நான் இப்பதிவிற்காகத் தெரிவு செய்தேன்.ஆனால் வெஸ்டர்ன் படைப்பு ஒன்றில் தம் பாணிக் காட்சிப்படுத்தல் தவிர்த்து புதிதாக கோஎன் சகோதரர்கள் என்ன பிறப்பித்திருக்கிறார்கள் எனும் கேள்விக்கு படத்தில் விடை இல்லை எனவே தோன்றுகிறது. True Grit ஐ விட அற்புதமான வெஸ்டர்ன்களை நாம் கடந்து வந்திருக்கிறோம். அந்த வகையில் கோஎன் சகோதர்களின் இத்திரைப்படம் சிறிய ஏமாற்றமே. சுழல் புதிர்கள் நிறைந்த வழமையான அவர்கள் கதை சொல்லலிருந்து அவர்கள் இத்திரைப்படத்தில் விடுப்பட்டிருப்பதும் இதற்கான காரணமாக இருக்கலாம். [**]
ட்ரெயிலர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக